×

ஓவியம் மற்றும் சிற்பக்கலையில் சாதனைப் படைத்த 18 கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருதுகள் அறிவிப்பு..!!

சென்னை: ஓவியம் மற்றும் சிற்பக்கலையில் சாதனைப் படைத்த 18 கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் ஓவிய நுண்கலைக் குழு வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் என்னும் விருதும், தலா ரூ.1,00,000 வீதம் பரிசுத் தொகையும் வழங்கி வருகிறது.

இவ்விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்வாளர் கூட்டம் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் திரு.சே.ரா.காந்தி இ.ர.பா.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓவியர்கள் கோபிநாத். ஜெயக்குமார். சண்முகபிரியா, சிற்பிகள் தே.ராதாகிருஷ்ணன் ஸ்தபதி, கோவிந்தராஜன், நவீன சிற்பக்கலைஞர் ராகவன் நாகராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டு 2021- 2022 முதல் 2023 – 2024 வரையிலான மூன்று வருடங்களுக்கு 18 கலைஞர்களை தேர்வு செய்தனர்.

மரபுவழி ஓவியம் பிரிவில் ஓவியர் ராமு (எ) எஸ்.எஸ்.ராமதாஸ். மணியம் செல்வன், ஏ.ராஜமோகன், வாசுகி லஷ்மி நாராயணன், சோ.வேல்முருகன் (கோவில் பட்டி, தூத்துக்குடி) மரபுவழி சிற்பம் பிரிவில் இரா.செல்வநாதன் ஸ்தபதி, முனைவர் கி.ராஜேந்திரன், உலோக சிற்பக்கலைஞர் இரா.ரவீந்திரன், மர சிற்பக்கலைஞர் க.பால்ராஜ் (சிவகங்கை) நவீன ஓவியம் பிரிவில் அ.விஸ்வம், கோ.சுப்பிரமணியம், எஸ்.வி.பிரபுராம், எஸ்.அருணகிரி, கே.புகழேந்தி, அதிவீரராம பாண்டியன், நவீன சிற்பம் பிரிவில் ந.கருணாமூர்த்தி, டி.விஜயவேலு, ஹேமலதா ஆகிய கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் வருகின்ற 5ம் தேதி திங்கட்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தலைமையிலும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முன்னிலையிலும் நடைபெறும் இசை விழாவில் இக்கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

The post ஓவியம் மற்றும் சிற்பக்கலையில் சாதனைப் படைத்த 18 கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருதுகள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government's Art Chemmal Awards ,Chennai ,Government of Tamil Nadu ,Fine Arts Committee ,Tamil Nadu State Department of Art and Culture ,Tamil Nadu ,Art Chemmal Awards ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை...